சென்னை: #Covid19 இரண்டாம் அலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம்; கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்குவோம்; கோடை தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்களையும் அமைப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழக அரசு இன்று பல கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து அறிவிப்பு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது,
தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இனைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு – மருத்துவ உதவி – அத்தியாவசியத் தேவைகளை தி.மு.கழகம் நிறைவேற்றியது. கழக உடன்பிறப்புகளான அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்றுத் தொண்டாற்றினர்.
இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்.
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட ‘ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.