டில்லி
கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகள் வெளியாகி உள்ளன.

செய்தி ஊடகங்கள் கொரோனா குறித்த 10 முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளன. அவற்றை நாம் இங்கே காண்போம்
- சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி அதார் புனேவாலா தனது நிறுவனம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்தைத் தயாரிக்க ஜூன் மாதத்துக்குள் ரூ.3000 கோடி தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் தடுப்பூசி தயாரிப்பு தேவையை விடக் குறைவாக உள்ளதாகவும் இதனால் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் மருந்து விநியோகம் தாமதம் ஆவதால் தங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் நேற்று ஒரே நாளில் உலகிலேயே அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,15,736 பேர் பாதிக்கப்பட்டது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அளவிலும் அதிகமாகும்.
- இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் மட்டும் 5.358 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் ஆந்திரா, சத்தீஸ்கர், ஹரியான, மகாராஷ்டிரா, ஒரிசா மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து இந்த மாநிலங்கள் ஏற்கனவே மத்திய அரசுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- பஞ்சாப் மாநிலத்திலும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இங்கும் மலாகி உள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் காவல்துறையினர் நகர எல்லைக்குள் 144 தடை உத்தரவு விதித்துள்ளனர். மேலும் நீச்சல் குளங்கள், ஜிம்கள், விருந்து அரங்குகள், உள்ளிட்டவை அனைத்தையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
- ஓட்டுநர் மட்டும் வாகனத்தை ஓட்டினாலும் முகக் கவசம் அவசியம் என டில்லி உயர்நீதிமன்றம் அறிவித்ததையொட்டி டில்லி காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி உள்ளனர்.
- திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தமக்கு கொரொனா பாதிப்பு உறுதி ஆனதாகவும் தாம் தனிமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்ய சாமிநாதன், “தற்போது முழு ஊரடங்கு அவசியமாகும். அதன் விளைவுகள் பயங்கரமாக இருந்தாலும் பொறுத்தாக வேண்டும். ஏனென்றால் இரண்டாம் அலையைத் தொடர்ந்து மூன்றாம் அலையும் வரலாம். எனவே அனைவருக்கும் தடுப்பூசி போடும்வரை இது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வயது வந்த அனைத்து அமெரிக்கர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உள்ளவர்கள் என அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel