சென்னை: தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சில பகுதிகளில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பிரச்சினை காரணமாக வாக்குப்பதிவு தாமதமான நிலையில், சில இடங்களில் கட்சியினர் இடையேயும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், அவிநாசி, ஆவடி தொகுதிகளில் திமுகவிற்கு வாக்களித்தால் விவிபேட் இயந்திரத்தில் அதிமுக சின்னம் காண்பிப்பதாக புகார் எழுந்துள்ளது.  அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் தொகுதியான ராயபுரத்திலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே 52 வாக்குகள் பதிவானதாகக் காட்டியதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு வாக்கு பதிவு தொடங்கியது.

ஆவடி, அவிநாசி தொகுதிகளில்  திமுகவிற்கு வாக்கு செலுத்த அந்த பட்டனை அழுத்தினால் அதிமுகவில் லைட் எரிந்திருக்கிறது. மேலும் விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை என காட்டியதாக புகார் எழுந்தது.  ஆவடி விவேகானந்தா பள்ளியில் உள்ள 123வது வாக்குச்சாவடியிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்தன. இதனால், வாக்குப்பதிவு தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவிநாசியில் சபாநாயகர் தனபாலும் போட்டியிடுகிறார். ஆவடியில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.‘ அங்கு பணப்பட்டுவாடா செய்து வாக்காளர்களை திசை திருப்புவதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.