சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை என தேர்தல் பணிக்கு வந்துள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குப்பதிவையொட்டி, தமிழகம் முழுவதும் 88,900 வாக்குச்சாவடிகள் தயார் நிலை இருப்பதாகவும்,   தேர்தல் பணியில், சுமார் 4.17 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர். இதில், பள்ளி, கல்லூரிகளை தவிர்த்து, சத்துணவு மையம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம் போன்றவைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல வாக்குச்சாவடிகளுக்கு பெண் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அடிப்படை தேவையான தண்ணீர், கழிவறை வசதி மட்டுமின்றி,  அவர்கள் உட்காரக்கூட வசதி செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சில வாக்குச்சாவடிகளில் பணிக்கு வந்துள்ள அலுவலர்கள், பல முறை தேர்தல் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும், மாலை 6 மணி வரை எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்றும், இதே நிலை நீடித்தால், நாளை வாக்குப்பதிவின்போது,  பணியை புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற குளறுபடிகள், சென்னையிலும் பல இடங்களிலும் தொடர்ந்து வருகிறது.  சென்னையில் அமைந்துள்ள பல பார்லவாடி மையங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு எந்தவொரு வசதியும் இன்றி, தேர்தல் அலுவலர்கள் தரையில் அமர்ந்துள்ளது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.