மதுரை:
மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அந்த அதிகாரியை தனது காரில் தானே ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் தேர்தல் அலுவலர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகளை கவனிக்க கண்காணிப்பு அதிகாரிகளாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதுபோல், ஏராளமான வெளிமாநில துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் உள்ளூர், வெளிமாநில துணை ராணுவவீரர்கள் பணிகளை கண்காணிக்கும் பார்வையாளராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தரம் வீர் யாதவ் என்கிற ஐபிஎஸ் அதிகாரி கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகிறார்.
மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவல்துறை விடுதியில் தங்கியிருந்த அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, அவருடைய வாகன ஒட்டுனரிடம் கேட்டுள்ளார். மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த அந்த ஓட்டுநர், கொரோனா அச்சம் காரணமாக தன்னால் மருத்துவமனைக்கு வர இயலாது எனத் தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவலை கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் , உடனே கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு தன்னுடைய சொந்தக் காரில் ஆட்சியரே வாகனத்தை ஓட்டி தரம்வீர் யாதவை அழைத்துச் சென்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தரம்வீர் யாதவுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள், தரம்வீர் யாதவ் தங்கியிருந்த அறையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, உடன் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி டிரைவர் வர தயங்கியநிலையில் மாவட்ட ஆட்சியரே காரை ஓட்டி அவரை மருத்துவமனையில் சேர்த்த இந்தப் பொறுப்பான செயல் என மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.