உளுந்தூர்பேட்டை: திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட குக்கர், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பறக்கும்படை அமைத்து, வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதை கண்காணித்து வருகிறது. அதன்படி, திண்டிவனம் அருகே மயிலம் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், கன்டெய்னர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட 2,380 குக்கரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி, டிரைவர் ஈரோட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. அவரிடம் குக்கர் கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அமலும், விசாரணையின்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், குக்கருடன் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, தொகுதி உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த குக்கர் யார், எதற்காக கொண்டு சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.