மும்பை: கொரோனா நிலவரம் இப்படியே சென்றுகொண்டிருந்தால், மறுபடியும் பொது முடக்கம் நிகழாது என்று எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என்று பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே.
மேலும், அந்த சூழலை எதிர்கொள்ள, அமைதியான முறையில் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வரும் நாட்களில், நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இப்போதுவரை, நாங்கள் 65 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை வழங்கியுள்ளோம். நேற்று மட்டும் 3 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாத காரணத்தால், சிலர், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். இன்னும் சில நாட்களில் கொரோனா தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அடுத்துவரும் 15-20 நாட்களில் மருத்துவ உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படலாம்” என்றுள்ளார் உத்தவ் தாக்கரே.