சீர்காழி: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள சொந்த ஊரான திருவெண்காட்டில் உதயசூரியனுக்கு வாக்கு வேட்டையாடி வருகிறார்.
சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளராக பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான திருவெண்காடு சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். திருவெண்காடு , பெருந்தோட்டம் பகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக அவர், அங்குள்ள ஈஸ்வரன் கோவில் மற்றும் புதன் கோவில்களில் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.
திருவெண்காடு ஈசனின் திருத்தலம் அமைந்த புண்ணியபூமி. இது, ஆதி சிதம்பரம் என்றும். போற்றப்படுகிறது. இங்குள்ள சிவன் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் புதன் பகவான் இங்கே தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இது. நவக்கிரக தலங்களில் இது புதன் பரிகாரத் திருத்தலமாக விளங்குகிறது. பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், மனக்கிலேசங்கள், மனக்குழப்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
துர்கா ஸ்டாலின் ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.