தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் வாக்காளர்கள் பலவிதம்
– வழிப்போக்கன்
தேர்தலின் போது வாக்குச்சாவடியில் தனது வாக்கை வேறொரு நபர் ஏற்கனவே பதிவிட்டு விட்டால், இழந்த உரிமையை தேர்தல் விதி எண் 49-P மூலம் எப்படி திரும்ப பெறுவது என்பதை ‘சர்க்கார்’ படத்தில் தெளிவாக கூறியிருந்தார்கள்.
இப்படி தேர்தல் விதியை மீறி போடப்படும் வாக்குகள் பொதுவாக ‘கள்ள வாக்குகள்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், விதிமுறையை எந்த விதத்திலும் பாதிக்காமல் மனித மனங்களை மட்டுமே பாதித்து பெறப்படும் ஓட்டுகள் பலவிதம்.
சத்திய வாக்கு :
உடல் நலிவுற்று படுத்த படுக்கையாகிவிட்ட குடும்ப தலைவரின் அன்புக் கட்டளையை மீற நினைக்காமல் அவரின் மறைவுக்குப் பிறகும் அவர் விரும்பிய கட்சிக்கு வாக்களிப்பது, இது சத்திய வாக்கு. விளக்கின் மீதும், வெற்றிலை பாக்கு வைத்து சத்தியம் வாங்கும் நிகழ்ச்சிகளும் இதில் அடக்கம்.
விளம்பர ஒட்டு :
கட்சி என்றில்லை வேட்பாளரின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி அதன் சாத்திய கூறுகளை ஆராயாமல் போடும் ஓட்டு, விளம்பர ஒட்டு.
உள்ளூர் சார்ந்த ஒட்டு :
தங்கள் கிராமத்தில் செல்வாக்குள்ளவர்கள் சொல்லும் நபருக்கு ஓட்டளிக்கும் சம்பவங்களும், தங்கள் கிராமத்தை சார்ந்த நபருக்கு ஓட்டளிப்பதும் உள்ளூர் ஓட்டாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
குடும்ப ஒட்டு :
தலைமுறை தலைமுறையாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் குடும்ப ஓட்டு.
நிர்பந்த ஒட்டு :
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே கட்சிக்கு ஓட்டுப்போடும் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல, முதல் முறை வாக்காளர்களாக உள்ள இளம் தலைமுறையினரும், தனக்கு என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் குடும்ப உறுப்பினர்களின் நிர்பந்தத்தால் போடும் ஓட்டு, நிர்பந்த ஓட்டு.
அனுதாப ஒட்டு :
வேட்பாளரின் உடல் நிலையை கருதியும், ஏற்கனவே பெற்ற வாய்ப்பில் தன் இயலாமையை கண்ணீருடன் சொல்லி சேகரிக்கும் அனுதாப வாக்கு.
இப்படி, இந்த ஓட்டுகள் எதுவும் தேர்தல் விதியை மீறியதாக அமையவில்லை என்றபோதும், வாக்காளர்களை சுதந்திரமாக சிந்திக்க விடாமல் வாங்கும் வாக்குகளாக உள்ளதோடு, அனைத்து கருத்துக்கணிப்பையும் பொய்யாக்கி ஓரிரு சதவீதத்தில் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்க இந்த சகலவிதமான ஓட்டுகள் தான் உதவுகின்றன என்பது தவிர்க்க முடியாத அரசியல் உண்மை.