முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. ஆறுமுகமசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலாஸ்மஹாலில் இதன் அலுவலகம் உள்ளது. பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த ஆணையத்தில் பணிபுரிய (டெபுடேஷன்) நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி தவிர இரண்டு போலீஸ் காரர்களும் இதில் அடக்கம். இவர்களுக்கு நல்ல சம்பளம் அளிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை சாட்சியம் சொல்ல இந்த ஆணையத்தால் அழைக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை முறையீடு செய்ததால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது.
10 மாதங்களாக இடைக்கால தடை நீடிக்கிறது. ஆணையத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை.
ஆனால் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழக்கம் போல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த லட்சணத்தில் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் எப்போது விலக்கும் என்று தெரியவில்லை. விசாரணை மீண்டும் எப்போது தொடங்கும் என்றும் தெரியவில்லை. விசாரணை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்றும் தெரியவில்லை.
‘’விசாரணை ஆணையங்கள் நியமனத்தால் பொதுமக்கள் வரிப்பணம் வீணாவதுதான் மிச்சம்’’ என்று வேதனை படுகிறார், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு.
-ஏழுமலை வெங்கடேசன்