மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்த உலகக்கோப்பைத் தொடரில், இந்தியப் பெண்கள் அணி, தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்று, 8 புள்ளிகளுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.

இந்நிலையில், தலா 4 புள்ளிகளைப் பெற்றிருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் மூனே எடுத்த 60 ரன்கள்தான் அதிகபட்சம்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியோ, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் வரை தொட்டு, 4 ரன்களில் போட்டியை இழந்தது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி, டி-20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறுவது இது 7வது முறையாகும்.