சென்னை: பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்யும் மாணாக்கர்களுக்கு, தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; அரசுப் பொதுத் தேர்வுகளில், பலவித முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு, பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆள்மாறாட்ட குற்றத்தில் ஈடுபட்டால், அரசுத் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகியவை நடத்தும் அனைத்துவித தேர்வுகளையும் எழுத நிரந்தர வாழ்நாள் தடை விதிக்கப்படும்.

மேலும், காப்பி அடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால், தேர்வறையிலிருந்து சம்பந்தப்பட்ட மாணாக்கர் வெளியேற்றப்படுவார். தொடர்ந்து, 2 தேர்வுகளை எழுதுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. அடுத்து, 11ம் வகுப்பு & 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் விரைவில் துவங்கவுள்ளன.