சென்னை: சென்னை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழத்தின் சர்ச்சை துணை வேந்தர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான துரைசாமியின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. அதையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ஜெகதேஷ்குமாரை சென்னை பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக நியமிக்க தேடுதல் குழு மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, ஜெகதேஷ்குமாரின் பெயரை பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜேஎன்யுவில் ஜெகதேஷ்குமார் பதவிக்காலம் சர்ச்சையில் இருப்பதால், அவரை சென்னை பல்கலைக்கழகத்துக்கு நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து,

இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியதாவது: ஜெகதீஷ்குமார், ஜேஎன்யுவில் ஆர்ப்பாட்டங்களை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் கையாண்டவர். மாணவர்களுக்கு எதிராக வன்முறையை கையாண்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

தேடல் குழுவின் ஒரு பகுதியாக இதுபோன்ற சர்ச்சையில் சிக்கி உள்ளவரை நியமிப்பது என்பது பொருத்தமானதல்ல. குறிப்பாக அவர் பக்கச்சார்பான நடத்தை என்ற அடிப்படையின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர். பாஜகவின் அஜெண்டா என்பது தெளிவாக தெரிகிறது.

பாஜக மற்றும் இந்துத்துவாவை நாட்டில் ஊக்குவிக்க முயற்சிக்கின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அறிஞர்கள் பரிந்துரைக்கப்படுவதற்கோ அல்லது மாநிலத்திற்கு வெளியில் உள்ளவர்கள் கூட நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் குழுவில் வன்முறைக்கு காரணமான ஒருவரை நாங்கள் கொண்டிருக்க முடியாது.

நிதித்துறை, ஆசிரிய பதவிகளில் மூன்றில் இரண்டு பங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. அரசு நடத்தும் பல்கலைக்கழகத்தில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே எங்களுக்கு சரியான துணைவேந்தரை தேர்வு செய்ய முடியும் என்று கூறினார்.