சென்னை:

மிழகத்தில் குடிநீர் ஆலை உற்பத்தியாளர்கள் போராட்டம் இன்று  5வது நாளாக தொடர்ந்து  வருகிறது. இதற்கிடையில், அனுமதியின்றி செயல்பட்டு  வந்த குடிநீர் ஆலைகள், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி  சீல் வைக்கப்படும் பணியும்  தொடர்ந்து வருகிறது.

வேலூர்- காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் புற்றீசல் போல தொடங்கப்பட்டு வரும் கேன் குடிநீர் ஆலைகள், பெரும் சுகாதார சீர்கேடு களையும், நிலத்தடி நீர் மாசுபாட்டையும் அதிகரித்து வருகின்றன.

இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை உடனே சீல் வைக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து, ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள், நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

இன்று 5வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அதிகவிலைக்கு கேன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் திருட்டுத்தனமாக வீடுகளுக்கு வரும் கார்ப்பரேசன் தண்ணீரை பிடித்து கேன்களில் அடைத்து சிலர் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுவரை ரூ.20, ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேன் குடிநீர் தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், திருமண நிகழ்ச்சிகளிலும் கேன் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த குடிநீர் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று, திமுக எம்எல்ஏவும், பொருளாளருமான துரைமுருகனுக்கு சொந்தமான அருவி குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த ஆலை அரசின் அனுமதியின்றி  காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிராமத்தில்  செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் இன்று சீல் வைக்கப்பட்டது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.