லண்டன்
பூமியை விட பெரியதான மனிதர்கள் வாழத் தகுதியான ஒரு வெளிக்கிரகத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாம் வாழும் இந்த பூமி கிரகத்தைப் போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களைக் குறித்த ஆராய்ச்சிகளை மனிதன் தொடர்ந்து நடத்தி வருகிறான். இவற்றில் பல புதிய உண்மைகள் தெரிய வருகின்றன. வேறு ஏதேனும் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்த சோதனைகளைப் பல நாட்டின் விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதுவரை வேறு எந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழத் தகுதியான நிலை இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தில் இருந்து ஒரு புதிய வெளிக்கிரகம் கண்டறியப்பட்டது குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புதிய கிரகத்துக்கு கே2-18பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 124 ஒளி வருடங்கள் தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது.
இது குறித்து மேலும் பல விவரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் நிக்கு மதுசூதன், “இந்த புதிய வெளிக்கிரகமான கே2-18பி நெப்டியூன் கிரகத்தின் அமைப்பை ஒட்டி உள்ளதால் இதை மினி நெப்டியூன் எனக் கூறலாம். நெப்டியூனை விட அளவில் சிறியதாகவும் பூமியை விட பெரியதாகவும் இந்த கிரகம் உள்ளது.
பூமியை விட 2.6 மடங்கு பெரிய ஆரம் கொண்ட இந்த மினி நெப்டியூன் கிரகத்தின் எடை நமது பூமியைப் போல் 8.6 மடங்கு அதிக எடையுடன் உள்ளது. குறிப்பாக இந்த கிரகத்தில் நீர் மற்றும் நீராவி உள்ளது. எனவே இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழத் தகுதி உள்ளது எனக் கருதப்படுகிறது. அந்த கிரகத்தின் உள்தன்மைகள் குறித்து மேலும் ஆய்வு செய்த பிறகு இது குறித்து மேலும் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த கிரகத்தின் வெளிப்புறத்தில் ஒரு அடர்த்தியான ஹைட்ரஜன் படிவம் உள்ளது. அதில் அதிக அழுத்தமான நீர், பாறைகள் மற்றும் இரும்பு உள்ளது. மனிதனைப் போன்ற உயிரினங்கள் வாழ இந்த வகையான அமைப்பு தேவை என்பதால் இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த ஹைட்ரஜன் படிவம் எவ்வளவு தூரம் படர்ந்துள்ளது என்பதைக் கண்டறிந்த பிறகே இங்கு உயிரினங்கள் வசிக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.