காஞ்சிபுரம்: என் அப்பாவின் மரணத்திற்கு நீதி கேட்கவே பாமகவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுகிறேன் மறைந்த வன்னியர் சங்கத்தலைவர்  காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை ஆவேசமாக கூறினார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் மறைந்த வன்னியர்சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை, காஞ்சிபுரம் தொகுயில்,  பாமகவை எதிர்த்து போட்டியிடும், திமுக வேட்பாளர் எழிலரசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார்  போட்டியிடுகிறார். திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசனும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பிரபாகரன் உள்பட 16 பேர் களத்தில் உள்ளனர்.

பாமகவுக்கு எதிராக திமுக வேட்பாளர் எழிலரசுக்கு ஆதரவாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் பகுதியில்தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது,  “எனது தந்தை, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர்  குருவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது அதற்கு நீதி கேட்டு நான் பரப்புரையில் ஈடுபட்டுள்ளேன். தேவைப்பட்டால் தைலாபுரத்தில்கூட பரப்புரை மேற்கொள்வேன்” என்றவர்,  , “இலவசக் கல்வி எனக் கூறும் பாமக நிறுவனர், மக்களை ஏமாற்றி வருகிறார்,  அவரது அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்து மாணவர்களை சேர்த்து வருகிறார்”  என்று குற்றம் சாட்டியவர், பாமக  கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் எனக் கூறும் ராமதாஸின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களை மது அருந்த வேண்டாம் என்று கூற அவர் மறுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார். அப்போது பாமகவினர் சிலர் இடையூறு  செய்தனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால்  சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.