ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் அணி, தனது முதல் இன்னிங்ஸில் 354 ரன்களை எடுத்தது.

டாஸ் வென்ற இலங்கை, பெளலிங் தேர்வுசெய்த காரணத்தால், பேட்டிங் செய்த விண்டீஸ் அணியின் துவக்க வீரர் பிராத் வெய்ட், 126 ரன்கள் அடித்து அவுட்டானார். அவருக்கு இறுதிகட்டத்தில் நல்ல ஒத்துழைப்பை அளித்த கார்ன்வால் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஜேஸன் ஹோல்டர் 30 ரன்களும், ஜோசுப் 29 ரன்களும் அடிக்க, மேயர்ஸ் பங்கு 49 ரன்கள். இறுதியில், 111.1 ஓவர்களில், 10 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 354 ரன்களை சேர்த்தது.

இலங்கை சார்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளையும், சமீரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பெர்ணான்டோ, எம்பல்டெனியா மற்றும் டி சில்வாவுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 1 விக்கெட் இழந்து 56 ரன்களை சேர்த்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது நினைவிருக்கலாம்.