தமிழக சட்டமன்ற தேர்தலில் தாமரையை மலர வைக்கும் முயற்சிகள் மலையளவு மேற்கொள்ளபட்டு வருகிறது.

அதில் ஒரு முயற்சியாக, தங்கள் கட்சியின் தேர்தல் விளம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

2010 ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான பிரச்சார பாடலான கலைஞர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலுக்கு நடனமாடிய ஸ்ரீநிதி சிதம்பரத்தின் புகைப்படத்தை எடுத்து தற்போது தனது பிரச்சார விளம்பரத்தில் பா.ஜ.க. புகுத்தியிருந்தது தெரியவந்திருக்கிறது.

இரு தினங்களுக்கு முன் இந்த விளம்பரத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பா.ஜ.க. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தவுடன், அந்த பதிவை நீக்கியுள்ளது.

இந்த பதிவை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பலர், இதுகுறித்து பா.ஜ.க. வை விமர்சித்து வருகின்றனர்.

ஸ்ரீநிதி சிதம்பரமும், “எனது படத்தை அவர்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அபத்தமானது, தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியும், “யாருடைய அனுமதியும் பெறாமல் செயல்படுவது பாஜக வுக்கு கைவந்த கலை என்பது தெரியும், இருந்தபோதும், ஸ்ரீநிதி சிதம்பரத்தின் அனுமதி இல்லாமல் அவரது படத்தை பயன்படுத்தியது அநாகரீகமான செயல்” என்று கண்டித்துள்ளது.

மேற்கு வங்கத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டதாக சமீபத்தில் வந்த விளம்பரத்தில், வீடு வழங்கப்படாத ஒரு பெண்ணின் புகைப்படத்தை அவரது அனுமதியில்லாமல் பா.ஜ.க. பயன்படுத்தியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.