சென்னை:  தனது வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டியதால் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை கைது செய்வதை தடுக்கும் வகையில், அமைச்சர் கடம்பூர் ராஜு சார்பில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ ,  கடந்த 12ந்தேதி ஊத்துபட்டி அருகே தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார். அப்போது தேர்தல் பறக்கும்படை அதிகாரி மாரிமுத்து தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தனது வாகனத்தில் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பே சோதனை நடத்தியதாகவும், தனது வாகனத்தை மறித்து அடிக்கடி விசாரணை நடத்துவதாகவும் கூறிய கடம்பூர் ராஜூ, மாரிமுத்துவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி நாலாட்டின்புத்துார் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை. ரசீது மட்டும் தந்தனர். சிவகாசியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான மாரிமுத்துவிடம் தேர்தல் கண்காணிப்பு உயர் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கடம்பூர் ராஜுமீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், கடம்பூர் ராஜு முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.