தாராபுரம்: பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம்; காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே நோக்கம் என்று விமர்சித்தவர், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மீதான திமுகவினரின் விமர்சனத்தை கடுமையாக சாடினார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியுடன், முதல் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எல்.முருகன், ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் , வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக எல்.முருகன் வரவேற்று பேசினார். தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் உரையாற்றினார்கள். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரையை கோவை வேட்பாளர் வானதி சீனிவாசன் மொழிபெயர்த்து கூறினார்.
உரையின் தொடக்கத்தில், வெற்றி வேல் வீர வேல் என கூறியவர் வணக்கம் என்று கூறிக்கொண்டு தொடர்ந்து பேசினார், ‘தமிழகத்தின் மிகப் பழமையான நகரத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழில் சில உதாரணங்களைக் கூறியதை நினைவுகூர்கிறேன். தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமைக்கொள்கிறது என்று பேசியவர்,
தமிழகத்தில் பெண்கள் திமுகவினரால் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் லியோனி, திமுக எம்.பி. ராசா பேசியது குறித்து கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தவர், தமிழக முதல்வரின் தாயாரை திமுக பிரமுகர் அவமதித்துள்ளார். பெண்களை அவமதித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அக்கட்சி எடுக்கவில்லை. ஒருவேளை மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலுள்ள பெண்கள் அனைவரும் அவமதிக்கப்படுவார்கள். பெண்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல அவர்களால் முடியாது. பெண்களின் கண்ணியத்தைக் காக்க கிராமப் புறங்களில் பாஜக அரசால் பல கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதா சட்டமன்றத்தில் திமுகவினரால் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட நாளான 1989 மார்ச் 25ஆம் தேதியை நினைவு கூர்ந்து, பெண்களை இழிவுபடுத்தப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தவர், ஒருவேளை திமுக-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் இன்னும் பெண்களை இழிவுபடுத்துவார்கள். திமுக, காங்கிரஸ் தலைமைகள் தங்களது நிர்வாகிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் லட்சியம் நான். சமுதாயத்திலுள்ள விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் நலனுக்கான பாடுபடுவேன். என்றவர்ல, தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றியது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான். தாய்மொழியில் மருத்துவக் கல்வி, தொழிற்கல்வியை வழங்க மத்திய அரசு விரும்புகிறது, சிறு, குறு தொழில் முனைவோர்க்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதுக்கும் பொம்மை ஏற்றுமதி மையமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்
காங்கிரஸ் – திமுகவைப் பொருத்தவரை வாரிசு அரசியல் தான் நோக்கமாக உள்ளது. திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு வளர்ச்சிதான் முக்கியம். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு குடும்பம்தான் முக்கியம் என்றார்.