புனே: சாம் கர்ரன் தன்னை வெளிப்படுத்திவிட்டார் என்றும், எம்எஸ் தோனியின் தாக்கம் அவரிடம் இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர்.
ஒருநாள் தொடரின் முடிவில், அவர் கூறியுள்ளதாவது, “சாம் கர்ரன் உண்மையில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரின் உழைப்புக்கு ஏற்ற பலனாக வெற்றி கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பாதிப்பு, தாக்கம் சாம் கரனிடம் இருப்பதைப் பார்க்கிறேன். கடைசிவரை போராடுவது, ஆட்டத்தை ஃபினிஷிங் செய்ய முயல்வது, வெற்றி கிடைக்கும்வரை ஆட்டத்தை எடுத்துச் செல்வது என்ற தீர்க்கத்தைப் பார்க்கிறேன்.
தோனி மிக உயர்ந்த மனிதர். அவருடன் உரையாடும் வாய்ப்பை சாம் கர்ரன் பெற்றுள்ளார். தோனியின் உண்மையான தாக்கம்தான் சாம் கரனின் ஆட்டத்தில் காணப்பட்டது. சாம் கரன் இதே ஆட்டத்தைத் தொடர்ந்தால் சிறப்பாக முன்னேறலாம். சாம் கரனுக்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது. ஆனால், ஆட்டத்தைக் கடைசிவரை எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகிவிட்டார். அவரின் ஆட்டம் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது.
இதுபோன்ற கடினமான சூழல்களில் பல வீரர்கள் தங்களை வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்கள். ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சாம் கர்ரன், அதிலிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்னைப் பற்றி நான் சிந்தித்ததுகூட இல்லை.
சாம் கர்ரன் விளையாடிய விதத்தில் இருந்து அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். தனி வீரராக இருந்து அணியைத் தோல்வியடையாமல் கொண்டு செல்ல முயல வேண்டும் எனச் சிந்தித்தோம். உண்மையில் சாம் கரன் மேட்ச் வின்னர்தான். ஃபீல்டிங்கில் ரிஷப் பந்த் விக்கெட்டையும் சாம் கர்ரன்தான் வீழ்த்தினார்” என்றுள்ளார் பட்லர்.