சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் விட்டில் சுமார் 13நேரம் நடைபெற்ற ஐடி ரெய்டு முடிவுக்கு வந்துள்ளது. இந்த ரெய்டில், கணக்கில் வராத ரூ.50லட்சம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நபர்களின் வீடுகள், அவர்களுக்கு சொந்த இடங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன், தமாகா தலைவர் ஒருவரது வீடு மற்றும் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையாவீன்வீடு மற்றும் மகன் பிரகாஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீரபாண்டி என்பவர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் என நேற்று இரவு சோதனை நடத்தியது. ரகசிய தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீரபாண்டி வீட்டில் சோதனையிட்டதாக கூறப்பட்டது. விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் என்பவருக்குச் சொந்தமாக, இலுப்பூர் அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.