கொல்கத்தா: தொழில்துறை வளர்ச்சியடையாமல் பிரதமர் மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி விமர்சித்து உள்ளார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 , ஏப். 1, 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில், நாளை 30 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரியா ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடனும், காங்கிரஸ் கட்சியானது இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அப்பாஸ் சித்திக்கியின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந் நிலையில், பிரச்சார பேரணி ஒள்றில் மமதா பானர்ஜி பேசியதாவது: தொழில்துறை வளர்ச்சி நின்றுவிட்டது. அவரது (பிரதமர் மோடியின்) தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னை சுவாமி விவேகானந்தர் என்பார். சில சமயங்களில் மைதானத்தின் பெயர் மாற்றுவார். அவரது மூளையில் ஏதோ தவறு இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து மமதாவின் இந்த விமர்சனம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.