வுகாத்தி

மாட்டுக்கறி இந்தியாவின் தேசிய உணவு என அசாம் மாநில சட்டப்பேரவை பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் கூறியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 27 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன.  அவற்றில் ஒன்றான கவுரிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பனேந்திர குமார் போட்டியிடுகிறார்.   இவர் கடந்த 1996 ஆம் வருடம் முதல் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.

போடோ இனத் தலைவரான இவர் கடந்த 1996 ஆம் வருடம் சுயேச்சையாக இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.  அதன் பிறகு அசாம் கன பரிஷத் சார்பில் 2001 ஆம் வருடம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு அவர் போட்டோ மக்கள் முன்னணியில் இணைந்து மூன்றாம் முறையாக 2011 ஆம் வருடம் வெற்றி பெற்றார்.  கடந்த டிசம்பர் மாதம் 29 அன்று இவர் பாஜகவில் இணைந்தார்.

தற்போது பாஜக சார்பில் போட்டியிடும் பனேந்திர குமார் தனது தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் தனது உரையில் .”மாட்டுக்கறியை யார் தடை செய்ய முடியும்? மாட்டுக்கறி இந்தியாவின் தேசிய உணவாகும்.   அசாம் மாநில கிராமப்புறங்களில் உள்ள இஸ்லாமியர்கள் யாராலும் மாட்டுக்கறி விற்பனையை இந்தியாவில் இங்கும் தடை செய்ய முடியாது என்பதை உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள அனைத்து மாநில அரசுகளும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும் என பாஜக முழக்கம் இட்டு வருகிறது.    இந்நிலையில் பாஜக வேட்பாளர் இவ்வாறு பேசியது கட்சியினர் இடையே கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.   பனேந்திரகுமார் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என மூத்த பாஜக தலைவர்கள் கூறி உள்ளனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பர்பன்சல் இந்து ஐக்ய மன்சா என்னும் அமைப்பு திஸ்பூர் காவல் நிலையத்தில் பனேந்திர குமார் இரு மதங்களிடையே கலவரம் ஏற்படும் வகையில் பேசித் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகப் புகார் அளித்து வழக்குப் பதிந்துள்ளது.  மேலும் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பி உள்ளது.