கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தருமபுரி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக தடங்கம் சுப்பிரமணிக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக டாக்டர் பிரபு ராஜசேகருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாலக்கோடு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக வழக்கறிஞர் பி.கே.முருகனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அரூர் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் அந்த மாவட்டத் தலைவர் சகோதரர் குமாருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் நீங்கள் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இவர்களுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கும் நானும் ஒரு வேட்பாளர் தான். முதலமைச்சர் வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே அதை மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உங்களை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் வாழ்ந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். தருமபுரிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்த இந்த ஸ்டாலின் உரிமையோடு உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
முதல்வர் பழனிச்சாமி, விவசாயிகளை காப்பாற்றி விட்டதாக, வேளாண்மையைச் செழிக்க வைத்து விட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. போலி விவசாயியாக இருக்கும் மிஸ்டர் பழனிசாமி அவர்களே… நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது. எவ்வளவுதான் விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எவ்வாறு மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியாதோ, அதேபோல எவ்வளவு விளம்பரத்தாலும் இந்த மண்ணை செழிக்க வைக்க நிச்சயம் முடியாது.
இந்த மாவட்டத்திற்கு, பாலக்கோட்டில் மகளிர் அரசு கலை – அறிவியல் கல்லூரி, பாலக்கோட்டில் தக்காளிக்கூழ் மற்றும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை, பாலக்கோடு எண்ணேகொல்புதூர் கால்வாய் திட்டம், தூள்செட்டி ஏரி திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும், பாலக்கோட்டில் பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக தருமபுரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,
தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்தில் விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும், தருமபுரியில் சிப்காட் இரண்டாம் தொழிற்பேட்டையும், பென்னாகரம், அரூரில் தொழிற்பேட்டையும் அமைக்க ஆவன செய்யப்படும், தருமபுரியில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையமும், நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலையும் அமைக்கப்படும், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம், தருமபுரி நகராட்சி மக்கள் பயனடையும் வகையில் மீண்டும் செயல்படுத்தப்படும்,
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்படும், பண்ணவாடியிலிருந்து நாகமரைக்கு காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும், பென்னாகரம் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட்டு தரம் உயர்த்தப்படும், பாப்பாரப்பட்டியில் வேளாண்மை பயிற்சி பள்ளி கல்லூரியாக உயர்த்தப்படும், மாரண்டஅள்ளியில் தென்னை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்,
குருபரஅள்ளியில் கால்நடை மருத்துவமனை, தும்பலஅள்ளி அணையிலிருந்து எண்ணேகொல் புதூர் வந்து சேரும் வெள்ளி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும், மொரப்பூரில் பால் குளிரூட்டும் நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஒகேனக்கல் நீர் மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்த நடவடிக்கை, பென்னாகரம், அரூர் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும், பென்னாகரம் அரூர் பகுதியில் அரசு கலை – அறிவியல் கல்லூரி, ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும், பாப்பாரப்பட்டியில் அரசு கூட்டுறவு சங்கங்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய ஊர்களில் குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கப்படும், அலியாளம் அணையில் இருந்து உபரி நீர் தருமபுரி மாவட்டத்து ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்து ஏரி குளங்களில் நிரப்பி விவசாய பாசன வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.
இது திராவிட மண். தந்தை பெரியார் – அண்ணா – கலைஞர் வாழ்ந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார்.
பின்னர் சேலம் வடக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சேலம் வடக்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் சகோதரர் ராஜேந்திரனுக்கு க்கு உதயசூரியன் சின்னத்திலும், சேலம் தெற்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக எ.எஸ்.சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளர் அருமை சகோதரர் மோகன் குமாரமங்கலத்துக்கு கை சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித் தரவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது இந்த மாவட்டத்திற்கு ஏராளமான சாதனைகளை செய்துள்ளது, இதை நான் உங்களிடம் பட்டியலிட்டு கூறியிருக்கிறேன், இது போன்று பட்டியல் போடுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி தயாராக இருக்கிறாரா? தமிழ்நாட்டை மட்டுமல்ல சொந்த மாவட்டத்தையே இன்றைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர் தான் இங்கு இருக்கும் பழனிசாமி அவர்கள். 10 வருடத்தில் எதையும் செய்யாத சாதிக்காத பழனிசாமி அவர்கள் இன்றைக்கு புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்.
சமூகநீதியைப் பற்றி இப்போது பேசத் தொடங்கி இருக்கிறார். சமூகநீதி என்பது திராவிட இயக்கம் இந்த நாட்டிற்குக் கொடுத்த மிக முக்கியமான கொடை. அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதித் தத்துவம்தான் அதற்கு காரணம்.
அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் சமூக நீதி. அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்கிய ஆட்சிதான் தலைவர் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
மத்திய அரசுப் பணிகளில் உள்ள 27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு காரணம் தி.மு.க. அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக – அனைத்து சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக – சமூகநீதி அரசாக செயல்பட்டதுதான் தி.மு.க. அரசு. எனவே உங்கள் அன்போடு ஆதரவோடு என்னுடைய தலைமையில் அடுத்து அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து இதைத்தான் செய்யப் போகிறது.
தமிழக மக்கள் வாக்களிக்கப் போவதற்கு முன்பு யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும். டெல்லியில் இருப்பவர்கள் தமிழர்களை இழிச்சவாயர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தான். ஆனால் அதற்காக மட்டுமல்ல, இந்த தேர்தல் என்பது நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நடக்கின்ற தேர்தல் என்பதை .மறந்துவிடாதீர்கள். நம்முடைய தன்மானம் பாதுகாக்கப்பட வேண்டும். மாநில உரிமைகளை மீட்டிட வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே மாநில உரிமைகளை பாதுகாக்க, தொழில்துறை செழிக்க, சேலம் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபிக்க, இது வீரபாண்டியார் மாவட்டம் என்பதை மீண்டும் நிலை நிறுத்திக் காட்டிட, உதயசூரியனுக்கு – கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு, உரிமையோடு, விரும்பி, வேண்டி, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவர் கலைஞரின் மகனாக, உங்கள் பாத மலர்களைத் தொட்டுக் கேட்கிறேன். ஆதரவு தாருங்கள். வெற்றி பெற வையுங்கள். நன்றி. வணக்கம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.