டெல்லி:  நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உக்கிரமடைந்து வருவதால், தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு  புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

ஓராண்டை கடந்தும் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்த பாதிப்பு, தற்போது தீவிரமடைந்து வருவதுடன், உருமாறிய நிலையிலும் பரவி வருகிறது. இது  மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, மகராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும்,

பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும்

கொ ரோன, பாதிக்கப்பட்டவருக்கு ஆழ்ந்த பரிசோதனை செய்ய வேண்டும். அவரைத் தனிமைப்படுத்துதல் அல்லது சரியான நேரத்தில் விரைவாக உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும்.

பரிசோதனையை அதிகப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய பிரிவினருக்கு அதை வேகப்படுத்த வேண்டும்.

70% அளவுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

உள்ளூர் சூழலைக் கண்காணித்து, கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நகர அளவில் கட்டுப்பாடுகள், வார்டுகள் அளவில் கட்டுப்பாடுகள் தேவைக்கு ஏற்ப விதிக்கலாம்.

மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளேயும் போக்குவரத்தில் தடை ஏதும் இல்லை.

தனிநபர்கள் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணிக்கத் தடையில்லை. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும் தடையில்லை.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் கொரோனா விதிகளைக் கட்டுப்பாட்டுடன் பின்பற்ற மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் பொறுப்பாக இருந்து நடவடிக்கை எடுத்து, அதைக் கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் போக்குவரத்து, ஷாப்பிங் மால், திரையரங்குகள், பூங்காக்கள், யோகா மையம், ரெஸ்டாரன்ட், கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தத் தடை ஏதும் இல்லை.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.