விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லுக் டிசம்பர் 24ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கெட்டப்புடன் அரவிந்த் சாமி இருக்கும்போது, அவருக்கு அருகில் கண்ணாடியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சமுத்திரக்கனி.
எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பதை உறுதி செய்தது படக்குழு. இதற்காக ஆர்.எம்.வீரப்பன் மாதிரியே நடப்பது, பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்துக்கொண்டு சமுத்திரக்கனி நடித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை . விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் அன்று தலைவி படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தலைவி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திரைப்படங்களில் இருந்து அரசியலுக்கு வந்தது, அவர் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.