கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூளகிரி ரவுண்டானா பகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரபப்புரை மேற்கொண்டார்.

பொதுமக்கள் மத்தியில்  பேச்சை தொடங்கிய ஸ்டாலின், ‘‘நாங்க  ரெடி… நீங்கள் ரெடியா’ என கேட்டுவிட்டு,  உங்களை தேடி, உங்களை நாடி உரிமையோடு உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தமிழகத்தின் நுழைவு வாயில் என போற்றப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல், கமிஷன், கரப்ஷன் அதிகமாக நடந்துள்ளது. இவர்கள் செய்த ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம்.  கொரோனா காலத்திலும் அந்த தொற்று நோயை பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும்அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படும். அதுபோல,   3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற முதல் தீர்மானமாக நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், 5 பவுனுக்குட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு பணியில் 3 லட்சத்து 50 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.

கிருஷ்ணகிரி, தேனிகனிக்கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்கு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை தரம் உயர்த்துதல், ஏற்றுமதி மண்டலம், சூரியகாந்தி எண்ணை உற்பத்தி மையம், பர்கூரில் ஜவுளி பூங்கா, என பல்வேறு இடங்களில் பஸ் நிலையம் உள்ளிட்ட வசதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.

தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, இழந்த உரிமைகளை பெற நாம் போராடி வெற்றி பெற வேண்டும். வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெல்ல போகிறோம். இந்த உதவாக்கரை ஆட்சிக்கு மக்கள் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.  எனவே இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகத்தை மீட்டெடுக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடித்தாருங்கள்” என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.