சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் 25 ந்தேதி (நாளை மறுநாள்) முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்து புறந்தள்ளப்பட்ட தேமுதிக, கடைசியில் டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. தேமுதிகவுக்கு அமமுக 60 தொகுதிகளை தாராளமாக வழங்கியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளதுடன் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லைஎன தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவரது மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், விஜயகாந்த் அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. முதலாவதாக . திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வருகிற 25-ந்தேதி மாலை 6 மணிக்கு பொதட்டூர்பேட்டையில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அவரது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் இன்னும் வெளியாகவில்லை.