சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான பொறுப்பாளளை  நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். அதன்படி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக, கட்சியின் துணைத்தலைவர் வாழப்பாடி இராம. சுகந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சியான காங்கிரசுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் குமரி பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளின் தேர்தல்  பொறுப்பாளர்களை மாநில காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, 25  சட்டமன்ற தொகுதி மற்றும் குமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்த பட்சம் 3 பேர் முதல் அதிகபட்சமாக 11 பேர் கொண்ட அணி அமைக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில், ஓமலூர் தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓமலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மோகன் குமாரமங்கலம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனாவார்.

இந்த தொகுதி பொறுப்பாளர்களாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன், பி.தீர்த்தாராமன், ஆர்.தேவதாஸ், சி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கொண்ட 25+1  தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற பொறுப்பாளர்கள் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.