போடி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து, திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். தர்மயுத்தம் நடத்தி ஜெ.வுக்கு துரோகம் செய்தவர் என்றும், நடித்து பதவி பெற்றவர் ஓபிஎஸ் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது சொந்த மாவட்டமான, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 3வது முறையாக களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இதனால், அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தங்கத்தமிழ்செல்வன், தனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தவர், தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எனது அரசியல் வாழ்க்கையில், உழைப்பால் தான் உயர்ந்துள்ளேன், யாரிடமும் நடித்து, கூனி, குறுகி பதவி பெற்றதில்லை. ஆனால், ஓ பன்னீர்செல்வம் நடித்து பதவி பெற்றவர். ஜெயலலிதா மட்டுமின்றி, டி.டி.வி.தினகரன், சசிகலாவிடம் நடித்து முதலமைச்சர் பதவி பெற்றவர் என்று விமர்சித்தார்.
மேலும், ஜெயலலிதா இறந்த பிறகு, அவரது சமாதியில் போய் தர்ம யுத்தம் நடத்தினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழல் அரசு என்றும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லிவிட்டு, பின்னர் பாஜக அறிவுரையை ஏற்று அ.தி.மு.கவுடன் இணைந்து துணை முதலமைச்சர் பதவியையும், மகனுக்கு எம்.பி பதவியையும் பெற்றுக் கொண்டார். ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இதுவரை சாட்சி சொல்லவில்லை. இதனால், பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றார்.
போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஓபிஎஸ், இதுவரை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை; தண்ணீர், சாலை உள்ளிட்ட வசதிகளை கூட சரி செய்ய முடியாதவராக இருந்துள்ளார். இதனால் அவர் மீது மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியே என்னை வெற்றிபெற வைக்கும் என்றார்.
திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை தடுப்போம் என்றவர், நியூட்ரினோ திட்டம் வராது என வாக்குறுதி தந்தார் பன்னீர்செல்வம் அதே திட்டத்திற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளார். அவர், மக்கள் நலனை பற்றி சிந்திக்கவில்லை என்பதற்கு நியூட்ரினோ திட்டமே சாட்சி.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நியூட்ரினோ திட்டம் நிறுத்தப்படும். கொட்டகுடி ஆற்றின் மேலே அணை கட்ட நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் குடிநீர் சிக்கல் தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.