சென்னை
தாம் உழைப்பால் திமுகவில் உயர்வு பெற்று தலைமை பதவியை அடைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் வேட்பு மனு திரும்பப் பெறுவது முடிந்து தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் திமுக சார்பில் வடசென்னை பகுதியில் ராயபுரத்தில் நேற்று திமுக பிரசாரக் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், “திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகத் தான் எப்போதும் இருக்கும், அதே வேளையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லனாக அதுவும் நகைச்சுவை வில்லனாக இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காசிமேட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல் படுத்தப்படும். தென் சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்று, வடசென்னையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும்
பாஜக என்றும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பது வரலாறு, ஆகவே தற்போது அதிமுக மூலம், பாஜக வெற்றி பெற முயன்று வருகிறது.
நான் உழைப்பால் மட்டுமே உயர்ந்து திமுக தலைமைப் பதவிக்கு வந்திருக்கிறேன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது போல் தகுதியில்லாமல் வரவில்லை ” எனத் தெரிவித்துள்ளார்.