சென்னை
வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக என அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சி புரிந்தும் அதிமுக தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை என திமுகவினர் புகார் கூறி வருகின்றனர்.
மேலும் அதிமுகவினர் அதிக அளவில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதாக பல புகார்கள் எழுப்பட்டுள்ளன. இந்த பணப்பட்டுவாடா விவகாரத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியாக ரெப்கோ வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரெப்கோ வங்கி இயக்குநர் திருவேங்கடம் இது குறித்து தலைமை செயலகத்துக்குச் சென்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் திருவேங்கடம், “ரெப்கோ வங்கி பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் நலனுக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அது தற்போது அ.தி.மு.க கட்சியின் வங்கியாக மாறியுள்ளது
தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பணப் பட்டுவாடா செய்வதற்குத் துணையாக இருப்பது ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில்குமார் ஆவர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இவர் இருக்கிறார். தவிர வங்கியின் மேலாண்மை இயக்குநர் இசபெல்லாவும் அ.தி.மு.க-வை சார்ந்தவர் என்பதால் பணப் பட்டுவாடா எளிதில் நடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு ரெப்கோ வங்கி முலம் செய்யும் பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க முடியாது. இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் வங்கியாக இல்லாததால் பணப் பரிமாற்றத்தைத் தடுக்கவும் முடியாது. ஆகவே உடனடியாக தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு தேர்தல் முடியும் வரை நேரடி பணப்பரிமாற்றம் நிறுத்தப்பட்டு காசோலை மூலமாகவே கடன் மற்றும் பணப்பரிமாற்றம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.