இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாக வில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.  கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் அருணாசலபிரதேச மாநிலத்தில் 3 நாள்களாக புதியதாக யாருக்கும் தொற்று இல்லை என்று அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 16,783 தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் 99.64 ஆக உள்ளது. 56 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

நேற்று 128 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை 4,11,821 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 62,784 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாநில நோய்த் தடுப்பு அதிகாரி டாக்டர் டைமோங் பதுங் தெரிவித்துள்ளார்.