ஈரோடு: அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
டிடிவியின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாசலம், அதிமுக, அமமுக ஒன்றாக இணைய வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனையும் சந்தித்து பேச வேண்டும் என்று குரல்கொடுத்து வந்தார். அவரை, இபிஎஸ்,ஓபிஎஸ் கண்டுகொள்ளாத நிலையில், கட்சிப்பணிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக ஒதுங்கி இருந்தார். தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தவர், பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக மனுவும் தாக்கல் செய்தார். இதனால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் நீக்கப்பட்டு இருப்பதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.