சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காமல், கட்சிக்கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதால், கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.  நேற்று தமிழகத்தில் புதிதாக  945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,62,374 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று  395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் மட்டும   2,39,878 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று காரணமாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று , தான் போட்டியிடும் ஆவடியில்  அதிமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், ஆனால் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது, தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம் என்றார்.

மேலும்,  மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. அதுபோல, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர், பொதுமக்கள்  கொரோனா வழிகாட்டுதல்களைப் முறையாகப் பின்பற்ற வேண்டும்,  வெகு கவனமாக இருக்க வேண்டும் என்றும்  கூறினார்.