கொல்கத்தா

நேற்று மேற்கு வங்க ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது.  இங்குள்ள 294 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  இங்கு ஆளும் திருணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.  திருணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி சூறாவளி பிரசாரம் செய்து வருகையில் பாஜக சார்பில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் எனப் பல தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர்.

ஏற்கனவே 3 முறை திருணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதியை அறிவித்து நேற்று வெளியிட்டுள்ளது.  மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்  வழங்கப்படும் உதவித் தொகை 6000ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பதும், முதல் முறையாக மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும்  மாதம் 500 குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாகவும், எஸ்சி/எஸ்டி குடும்பத்தினருக்கு 1,000 ஊதியமும் வழங்கப்படும் என்பதும் முக்கிய  அறிவிப்புகளாக உள்ளன.

அத்துடன் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் கடன் வரம்பு 10 லட்சமாகவும், வட்டி விகிதம் 4  சதவீதமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்த. கடன் தொகையை மாணவர்கள் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது   அது மட்டுமின்றி  மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டில் 10 லட்சம் புதிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும், 2000 புதிய பெரிய தொழிற்சாலைகளும்  அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின்  காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் வீல்சேரில் அமர்ந்தபடியே தேர்தல் அறிக்கையை மம்தா  வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.