சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சித் தலைவர்களின் சொத்து விவரங்கள், அவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது.
தமிழத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மார்ச் 12ந்தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் அவர்களின் சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன் விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
சொத்து மதிப்பில், திமுக தலைவர் ஸ்டாலினை விட, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதுபோல, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொத்துக்களும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனக்கு ஆண்டு வருமானே ரூ.1000ம்தான் என தெரிவித்துள்ளது இந்த ஆண்டின் சிறந்த காமெடியாக கருதப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ .47. 64 லட்சமாக உள்ளதாகவும், அவரது மனைவியின் பெயரில் ரூ. 1.04 கோடி சொத்து உள்ளதாகவும், அவரை சார்ந்திருப்பவர்களின் பெயரில் ரூ .50.21 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி பெயரில், ரூ .1.78 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், அவரை சார்ந்திருப்பவர்கள் சொத்துக்கள் ரூ .2.90 கோடி அசையா சொத்துக்களையும் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .4.68 கோடியாகும்.
கடந்த 2016 தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திர விவரங்களின்படி, அவரது அசையும் சொத்தின் மொத்த மதிப்பு ரூ .3.14 கோடி மற்றும் அசையா சொத்தின் மொத்த மதிப்பு ரூ .4.66 கோடி என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணைமுதல்வர் ஓ.பி.எஸ்
ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள பிரம்மாண பத்திரத்தில், அவரது பெயரில் ரூ.61.19 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், அவரது மனைவி பெயரில் ரூ.4.57 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன. அதேபோல், ஓபிஎஸ் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை. அவரது மனைவியின் பெயரில் ரூ.2.63 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது அசையும் சொத்து ரூ.55 லட்சம் ஆக இருந்தது என்று குறிப்பிட்டு உள்ளார். தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.5.19 கோடி ஆக இருப்பதாக மதிப்பிட்டு வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, 2016ல் ரூ.98 லட்சம் என ஓ.பி.எஸ் மதிப்பிட்டிருந்த அவரது அசையா சொத்தின் மதிப்பு, இப்போது ரூ.2.64 கோடி ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், தனக்கு பூர்விக சொத்தோ, நிலமோ எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 7 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்து 202 ஆக குறிப்பிடப்பட்டு உள்ளது. அவரது மனைவி துர்காவின் அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 99 ஆயிரத்து 137. ஸ்டாலினிடம் கார்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை. மனைவி துர்காவிடம் ரூ.24 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 720 கிராம் தங்க நகைகள் உள்ளன.
கடந்த 2016ம் நடைபெற்று தேர்தலின்போது, ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 988 ஆகவும், மனைவி துர்காவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 70 லட்சத்து 18 ஆயிரத்து 973 ஆகவும் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3 கோடி அதிகரித்துள்ளது. அவரது மனைவி துர்காவின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 836 குறைந்துள்ளது.
கோவிலபட்டி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த அமமுக தலைவர் டி.டி.வி தினகரன், தன்னிடம் 9.25 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளதாக அறிக்கை தாக்க செய்துள்ளார். எனினும், FERA வழக்கில், அவருக்கு 28 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை நிலுவையில் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து விவர அறிக்கையில், அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து ஒரு ஆயிரத்து 476 என மொத்தம் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாய் உள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு ரூ.49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 கடன் உள்ளதாகவும், கடந்த ஆண்டு வருவாய் ரூ.22 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்
சீமான் தாக்கல் செய்துள்ள பிரம்மாண பத்திரத்தில், ‘அசையும் சொத்தும் 31,06,500 ரூபாயும், அசையா சொத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு அசையும் சொத்து 63,25,031 ரூபாயும், அசையா சொத்து 25,30,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2019-2020-ம் ஆண்டு வருமானம் 1,000 ரூபாய் மட்டுமே என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். (1000 ரூபாய் ஆண்டு வருமானம் என்பது நகைப்புக்குரியதாக விமர்சிக்கப்படுகிறது )
உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் ர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், அவரது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து 9ஆயிரத்து 650 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆகும்.
கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், மொத்த வருமானம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 520 என்றும் கூறப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 730 மதிப்புள்ள 1,600 கிராம் மதிப்புள்ள தங்கம் உட்பட ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்து இருப்பதாகவும், அவரிடம் ரூ.50 ஆயிரம் கையிருப்பு உள்ளதாகவும், மொத்த வருவாய் ரூ.17 லட்சத்து 44 ஆயிரத்து 470 என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை ஸ்டாலினை விட மகன் உதயநிதியின் சுமார் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்,
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ள பிரம்மாணப் பத்திரத்தில், அவர் மற்றும் அவரது மனைவி இருவரின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 29.62 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் செலவுத்தொகையாக 30 லட்சத்து 74 ஆயிரத்து 622 ரூபாய் தொகையை இருப்பு வைத்துள்ளார்.
துரைமுருகன் வசம் 500 கிராம் தங்கம், ஒரு காரட் வைரம், அவரது மனைவி சாந்தகுமாரி வசம் 2, 224 கிராம் தங்கம் (அதாவது 2 கிலோவுக்கு அதிகமான தங்கம்), 5.5 காரட் வைரமும் உள்ளது. துரைமுருகன் வசம் ஒரு பார்ச்சூன் கார், மற்றும் 86 லட்சத்து 12 ஆயிரத்து 782 ரூபாய் தொகையையும், அவரது மனைவி சாந்தகுமாரி ஒரு கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தொகையையும் மற்ற நபர்களுக்கு கடனாகக் கொடுத்துள்ளனர்.
அசையும் சொத்து மதிப்பு: இரண்டு கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ரூபாய், அசையா சொத்துகளின் மதிப்பு: ஏழு கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்து 755 ரூபாய்
மொத்த மதிப்பு: ஒன்பது கோடியே 59 லட்சத்து 41 ஆயிரத்து 170 ரூபாய்
துரைமுருகன் மனைவி சொத்து மதிப்பு, அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு: 20 கோடியே இரண்டு லட்சத்து 50 ஆயிரத்து 712 ரூபாய்
கடந்த 2016ஆம் ஆண்டு தகவலின்படி, அவர் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி வசம் உள்ள அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தம் 29 கோடியே 78 லட்சத்து 80 ஆயிரத்து 701 ரூபாயாக இருந்தது . அப்போது, அசையும் சொத்துகளின் மதிப்பு 57 லட்சத்து எட்டாயிரத்து 425 ரூபாயாக இருந்தது. தற்போது, இரண்டு கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கிரிமினல் வழக்குகள் நிலுவை
துரைமுருகன் மீது எட்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், ஆறு வழக்குகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் ஆகியவை தொடர்பானதாகவும், லஞ்ச ஒழிப்பு காவல் துறையால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.