சென்னை: திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கல்லூரி மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்தியஅரசு, மாநில அரசை வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே தஞ்சையில் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், சில மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தொற்று பரவி உள்ளது. அதுபோல, தேர்தல் காரணமாக, பல இடங்களில் மக்கள் கூடுவதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,  திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், கல்லூரியில் படித்து வரும  250 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  மாணவர்கள் 14 பேர் மற்றும் ஒரு பேராசிரியருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து,  அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,  கல்லூரி மூட உத்தர விடப்பட்டு உள்ளது.