லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க பெண்கள் அணி வெற்றிபெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.

இந்நிலையில், 3வது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பெண்கள் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்தியாவின் பூனம் ராவத் 77 ரன்கள் அடித்தார்.

இந்திய பேட்டிங்கில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய மூவருமே மிகச்சரியாக தலா 36 ரன்களை அடித்தனர். 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 248 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், தென்னாப்பிரிக்க அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று, டக்வொர்த் லீவிஸ் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அணியின் துவக்க வீராங்கனை லீ, 132 ரன்களை விளாசினார். பிரீஸ் 37 ரன்களை அடிக்க, அந்த அணி 46.3 ஓவர்களிலேயே 223 ரன்களை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியது.