சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலுடன் மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் ஏற்பட்டு வந்த இழுபறி காரணமாக, நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் நீடித்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 12.30 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 173 தொகுதிகளில் நேரடியாக களம் காணும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, சென்னை கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவரது தந்தையும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது தாயார் தயாளு அம்மாளிடமும் ஸ்டாலின் ஆசி பெற்றார்.
பின்னர், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து ஸ்டாலின் மரியாதை மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த தேர்தலில் திமுக மட்டும் 173 தொகுதிகளிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. திமுக-வின் தேர்தல் அறிக்கை, நாளை வெளியிடப்படுகிறது.