சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 18 தொகுதிகளில் திமுக நேரடியாக பாமகவுடன்  மோதுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல்  6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக, திமுக  கட்சிகளுடன் தோழமை கட்சிகள் உடன்பாடு மற்றும் தொகுதிப்பங்கீடு முடிவடைந்து, தொகுதிகள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோல,  திமுக சார்பிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தனியாக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில்,  கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 3 தொகுதிகள், பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி  ஒதுக்கப்பட்டுள்ளது. . இதன்மூலம் 173 தொகுதிகள் திமுக நேரடியாக களம்காண உள்ளது.  கூட்டணி கட்சியினர் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எனவே உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண்கிறது.

அதிமுக கூட்டணியில், பாமக  செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 தொகுகளில் போட்டியிடுகிறது. இதில் 18 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது.