இந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறையாக ஒரு தொகுதியில்கூட, போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது.
கடந்த காலங்களில், திமுக அல்லது அதிமுக என எந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சில தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும். குறிப்பாக, திருவண்ணாமலை தொகுதி, ஒரு காலத்தில் காங்கிரஸ் செல்வாக்குப் பெற்ற தொகுதியாக இருந்தது. அந்த மாவட்டத்தின் பல தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு.
ஆனால், இந்தமுறை அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில், அம்மாவட்டத்தில் 1 தொகுதிகூட இடம்பெறவில்லை. விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் இம்மாவட்ட தொகுதி எதுவும் இடம்பெறவில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளிலும் திருவண்ணாமலை மாவட்ட தொகுதி இடம்பெற வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.
எனவே, இந்தமுறை அம்மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளிலும், திமுகவே முழுமையாக களம் காணலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.