சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், இன்று டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் 41 பேருக்கு இடம் மறுக்கப்பட்டு உள்ளது. இதனால்,அவர்கள் கட்சி தலைமைமீது அதிருப்தியில் உள்ளனர். இவர்களில் தற்போது சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டிடிவி தினகரன் கட்சியான அமமுகவில் இணைந்து, தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவரைத் தொடர்ந்து, மேலும் பல எம்எல்ஏக்கள் அமமுகவிற்கு தாவுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனக்கு, அதிமுகவில் மீண்டும் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது குறித்து கொதித்தெழுந்த ராஜவர்மன், மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறேன். சாத்தூர் தொகுதியின் உண்மையான நிலவரத்தை முதல்வர், துணை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கைகூலிக்குதான் பதவி என்றாகி விட்டது.அமைச்சரை எதிர்த்ததால் தான் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. என்னை கொலை செய்து விடுவதாக பல மிரட்டல்கள் விடுத்தவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
வேட்பாளர் பட்டியலில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு இல்லை என்று குமுறியவர், தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இணைந்துள்ளார். அவருடன் 4 ஒன்றியச் செயலாளர்களும், 2 ஒன்றிய கவுன்சிலர்களும் இணைந்துள்ளனர்.
சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். கடந்த 2016 தேர்தலில் இத்தொகுதியில் வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன், ‘‘எதிர் முகாமுக்கு’’ (டிடிவி அணி) சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் அவர் அதிமுகவுக்கு திரும்பி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இடையில், அமைச்சருக்கும், ராஜவர் மனுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, ஓரங்கட்டப்பட்ட ராஜவர்மனுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்தவர், தற்போது அமமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
அதிமுகவில் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 சிட்டிங் எம்எல்ஏக்களும், அவர்களது ஆதரவாளர்களும் ஓபிஎஸ், இபிஎஸ் மீது கொலைவெறியில் உள்ளனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல எம்எல்ஏக்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்து பஞ்சாயத்து பேசி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் முதல் விக்கெட்டாக ராஜவர்மன் அதிமுகவில் இருந்து விலகி உள்ளது. இவரைத் தொடர்ந்து மேலும் பல அமமுக கூடாரத்துக்கு செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுஅதிமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.