டெல்லி: வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரபரப்புடன் இயங்கி வருகின்றன.

தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளையும் முழு வீச்சில் செய்து வருகிறது. சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்பி திருச்சி சிவா தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிராக்கள்  பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.