சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது.
இதனை அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி சண்முகம் வெளியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 2000ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், 2014ம் ஆண்டு வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு கைநழுவியது.
2019ம் ஆண்டு வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தமிழகத்தில் வரலாறு காணாத வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கும் அதிமுக கூட்டணியை ஆதரித்து களமிறங்கி தொடர்ந்து பணியாற்ற புதிய நீதிக்கட்சி விரும்பி முடிவு எடுத்தது.
அதிமுக அணியில் சரியான பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேண்டுகோள் வைக்கப்பட்டு 11 தொகுதிகள் முன்வைக்கப்பட்டு அதில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின்பு 9 தொகுதிகள் முன்வைக்கப்பட்டு 4 தொகுதிகளாக கேட்கப்பட்டது.
அதில் கேட்கப்பட்ட தொகுதிகள் ஒதுக்கி தரவில்லை என்பதால் இந்த தேர்தலில் போட்டியிட புதிய நீதிக்கட்சி விரும்பவில்லை. தொடர் நடவடிக்கை குறித்து விரைந்து நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.