புதுடெல்லி: மோடி அரசின் வேளாண்மை விரோத சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் மாதக்கணக்கில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மகளிர் தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இணைந்தனர்.
விவசாயத்தை அழிக்கும் அந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதற்கொண்டு, தங்களின் குடும்பம் சகிதமாக டெல்லியின் எல்லைப்புறங்களை நோக்கி படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர். அவர்களின் போராட்டம் 100 நாட்களைத் தாண்டி சென்றுகொண்டிருந்தாலும்கூட, மோடியின் அரசு அதை இன்னும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள், டெல்லியின் ஒரு போராட்ட களத்தை நோக்கி திரண்டனர்.
கடுகு வயல்களைப் பிரதிபலிக்கும் வகையில், தலையில் மஞ்சள் கலர் முக்காடுகளைப் போர்த்திக்கொண்டு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டு, சிறிய அணிவகுப்புகளாக, ஒலிப்பெருக்கியில் சட்டங்களுக்கு ஆதரவாக உரையாற்றிக் கொண்டு, களத்தில் நிற்கின்றனர் அந்தப் பெண்கள்.
“இது, பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு முக்கியமான நாள். பெண்கள் ஒன்றுபட்டால், அவர்களின் இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும்” என்கின்றனர் அவர்கள்.
போராடும் இடத்தில், மொத்தம் 20000க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.