மே.வங்க மாநில சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி, அங்குள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து சுவேந்து அதிகாரி என்பவர், பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
சுவேந்து, மம்தா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். மம்தாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
“மம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மே.வங்காள மாநிலம், காஷ்மீர் போல் மாறி விடும்” என அவர் கூறினார்.
இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கண்டனம் தெரிவித்துள்ளார்.
“காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க.அரசு ரத்து செய்த போது, காஷ்மீர் மாநிலத்தை சொர்க்கபூமியாக மாற்றுவோம் என சொன்னது. அப்படி இருக்கும் போது , மே.வங்க, மாநிலம் காஷ்மீர் ஆவதில் என்ன தப்பு?” என அவர் வினா எழுப்பினார்.
“வங்காள மக்கள், காஷ்மீரை விரும்புபவர்கள். எங்கள் மாநிலத்துக்கு அவர்கள் அதிக அளவில் சுற்றுலா வருகிறார்கள். அவர்களுக்காக உங்களை மன்னிக்கிறேன்” என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
– பா. பாரதி