இந்தாண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து அணி, மொத்தமாக 5 தொடர்களில் ஆடி இறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அதேசமயம், இந்திய அணி மொத்தம் 6 தொடர்களில் ஆடி இப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இரு அணிகள் பங்கேற்ற கடைசி 2 தொடர்களை  மட்டும் எடுத்துக்கொண்டு நாம் ஒப்பிட்டால், நியூசிலாந்து அணி தன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த வலிமையற்ற இரு அணிகளை அடித்து துவைத்து தகுதிபெற்றுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலிமை குன்றியவையாக இருந்தன. எனவே, அவர்களை, தங்கள் சொந்த மண்ணில் வைத்து எளிதாக அடித்து துவைத்துவிட்டது நியூசிலாந்து அணி.

ஆனால், இந்தியா, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நிலைமையே வேறாக இருந்தது. முக்கிய வீரர்கள் பலரும் காயத்தினால் விலகிவிட, நிரந்தர கேப்டனும் இல்லாத நிலையில், பல புதிய வீரர்களை, அதாவது, வலைப்பயிற்சிக்கு அழைத்துவந்த வீரர்களை வைத்து இந்திய அணி, வலுவான ஆஸ்திரேலியாவை வென்று தொடரைக் க‍ைப்பற்றியது.

அதேபோன்று, இந்தியாவில் கடைசியாக சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்தும் வலுவான அணிதான். அந்த அணியையும் 3-1 என்ற கணக்கில் துவைத்து எடுத்துவிட்டது இந்தியா.

இந்திய அணி, கடந்த 2 தொடர்களில், சில புதிய டெஸ்ட் நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளது.

எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியாவை எதிர்கொள்ளும் நியூசிலாந்து படாதபாடு படவேண்டியிருக்கும் என்பதே கணிப்பாக உள்ளது.