அகமதாபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில், 600 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை, ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய, இந்தியாவின் ரிஷப் பன்ட்டை புகழ்ந்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தள்ளாடிக் கொண்டிருந்தபோது, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து, ஆட்டத்தை மொத்தமாக இந்தியாவின் பக்கம் திருப்பினார் பன்ட்.
ஜோ ரூட் கூறியுள்ளதாவது, “எங்கள் அணியின் பெளலர்கள், தன்மீது அழுத்தம் தரமுடியாத வகையில் ஆடினார் ரிஷப் பன்ட். சில நேரங்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை சாய்த்துள்ள ஆண்டர்சனுக்கு எதிராகவே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறார்.
இது மிகவும் திறமையும் தைரியமும் தேவைப்படும் ஒரு நடவடிக்கையாகும். ரிஷப் பன்ட் தனது ஆட்டத்தின் மூலம், இந்திய அணியை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார்” என்று புகழ்ந்துள்ளார் அவர்.
மேலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஸார் படேலையும் பாராட்டியுள்ளார் ரூட். இத்தொடரில், மிகவும் நுட்பமாகவும், தனது லைன் அன்ட் லென்த்தில் தவறு செய்யாதவராகவும் பந்து வீசினார் அக்ஸார் என்று பாராட்டியுள்ளார் அவர்.